அணியை விட்டே தூக்கணும்.. அஸ்வினை கழட்டி விட சதித் திட்டம்.. பின்னணியின் இந்திய அணி நிர்வாகம்
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அஸ்வினை டெஸ்ட் அணியில் இடம் பெற விடாமல் செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.
முதுகு வலி காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட தயாராகி உள்ளதால், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளரை ஆட வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஜடேஜாவை தேர்வு செய்ய முற்பட்ட போது, அவர் முதுகு வலியுடன் இருந்ததால், அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் டெஸ்ட்டில் அஸ்வின் 19 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். எனினும், அஸ்வின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதால் நீக்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டவர்கள் கூறி உள்ளனர்.
2023ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் நடந்த டாப் 3 சர்ச்சைகள்... ரசிகர்களை மிரளவைத்த தரமான சம்பவங்கள்!
இருந்தாலும், அஸ்வினுக்கு முதல் டெஸ்ட்டில் சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டாவது நாள் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடங்கியபோது, இந்திய அணியின் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தலா 15 முதல் 19 ஓவர்கள் வரை வீசி இருந்தனர்.
ஆனால், அஸ்வினுக்கு 8 ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டதுடன், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் ஓவருக்கு 4 ரன்களுக்கும் அதிகமாக ரன்களை வாரி இறைத்த போதும், குறைவான ரன்கள் கொடுத்த அஸ்வினுக்கு ஓவர்கள் அளிக்கப்படவில்லை.
மூன்றாவது நாளில் அஸ்வினுக்கு கூடுதலாக 11 ஓவர்கள் அளிக்கப்பட்டதுடன், அவர் 1 விக்கெட் வீழ்த்தினார். மற்ற நான்கு பந்துவீச்சாளர்களை விடவும் அஸ்வின் தான் குறைவாக ரன்கள் கொடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் அஸ்வின், ஜடேஜா என இருவரையும் பயன்படுத்தினால் இருவரும் தங்கள் அனுபவத்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்பதுடன், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அதை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்தலாம்.
எனினும், ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அஸ்வினை டெஸ்ட் அணியில் இடம் பெற விடாமல் செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.
குறிப்பாக 2023இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்காது என்ற காரணத்தை கூறி அஸ்வினை அணியில் சேர்க்கவில்லை. அப்போது இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இப்போது, அணியில் இடம் பெற்றாலும் அதிக ஓவர்கள் கொடுக்காமல் பிட்ச்சை காரணம் காட்டி அணியில் இருந்தே நீக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டு உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |