அமெரிக்க சிறையில் உள்ள மதுரோவை மீட்க வெனிசுலா சிறப்பு ஆணையம் – இடைக்கால அதிபர் ரோட்ரிக்ஸ் அறிவிப்பு
வெனிசுலாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவை மீட்கும் நோக்கில் ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியுள்ளார்.
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க சிறப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்வினையாக, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவை மீட்கும் நோக்கில் ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியுள்ளார்.
மதுரோவின் கைது வெனிசுலாவில் அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடியை உருவாக்கியது. இதைத் தடுக்கும் நோக்கில், வெனிசுலா உச்சநீதிமன்றம் தற்போதைய துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது. அவர், "நிக்கோலஸ் மதுரோவே வெனிசுலாவின் ஒரே சட்டபூர்வமான அதிபர்" எனவும், அவர் கைது செய்யப்பட்டது அமெரிக்காவின் சட்டவிரோதமான கடத்தல் எனவும் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரோவின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்:
ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் (வெனிசுலா தேசிய சட்டசபை தலைவரும், இடைக்கால அதிபரின் சகோதரரும்), யுவான்கில் (வெளியுறவு அமைச்சர்) – இருவரும் இணைத் தலைவர்களாகவும், ஃப்ரெடி நானென்ஸ் (தகவல் தொழில்நுட்ப அமைச்சர்) – ஆணைய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணையம், சர்வதேச அளவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளவும், மதுரோவின் சட்டபூர்வமான விடுதலையை வலியுறுத்தவும், உள்நாட்டில் பொதுமக்களின் ஆதரவை ஒருங்கிணைக்கவும் பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலாவில் ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்கும் வரை அமெரிக்கா அந்நாட்டை "நிர்வகிக்கும்" என அறிவித்துள்ளார் – இது உலகளாவிய கவனத்தையும், எதிர்ப்பையும் ஈர்த்துள்ளது.
