நடந்து கூட செல்ல முடியாத நிலை... மருத்துவமனையில் ரிஷப் பண்ட்! தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி, 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் அடங்கும்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயம் அடைந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி, 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் அடங்கும்.
பண்டின் பேட்டிங்கை வைத்து தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பே இருந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கூட அவர் கையில் காயம் ஏற்பட்டதால் வெறும் பேட்டிங் செய்ய மட்டும் தான் வந்தார்.
அந்த போட்டியில் அவர் ரன் அவுட் ஆனது தான் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. இந்த தருணத்தில் பண்ட் முழு உடல் தகுதியை எட்டியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த டெஸ்டில் இந்திய அணி 140 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
கேப்டன் சுப்மன் கில் 12 ரன்களில் வெளியேறினார். அப்போது களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், சாய் சுதர்சனுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி அரைசதம் கடக்க பண்ட் வழக்கம் போல் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது கிறிஸ் வொக்ஸ் வீசிய பந்து ஒன்று பண்டின் பேட்டில் பட்டு அதன் பின் காலை தாக்கியது.
இதனால் பண்ட் வலியால் துடித்து அப்படியே மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் பண்டை சோதித்தனர்.
அப்போது காலில் இருந்த ஷூவை கழற்றி பார்த்த போது பண்டின் காலில் காயம் அடைந்து வீங்கி இருந்தது. இதற்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் அப்போதும் வலியால் துடித்தார்.
இதை தொடர்ந்து ரிஷப் பண்டால் எழுந்து நிற்கவே முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்ய இயலாது என முடிவு எடுத்த இந்திய அணி நிர்வாகம் அவரை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தது.
இதை அடுத்து நடந்து கூட செல்ல முடியாத நிலை இருந்ததால்,சிறிய அளவிலான ஆம்புலன்ஸ் மூலம் மைதானத்தை விட்டு அவரை பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.
ரிஷப் பண்டின் காயம் நினைத்ததை விட அதிகமாக இருக்கும் என்பதால் அவர் இந்த தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது.