தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது எளிதல்ல; சவாலைச் சந்திக்கத் தயார்: இந்திய கேப்டன் சுப்மன் கில் கருத்து
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாளை கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாளை கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால், இந்தப் போட்டிகளில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை, அவர்கள் பலமானவர்கள் என்று கில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்கள். மேலும், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான தொடரை அவர்கள் சமன் செய்ததன் மூலம், தாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளனர். எனவே, அவர்களை வீழ்த்துவது என்பது எளிதான காரியமாக இருக்காது என்றும் கில் கூறியுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் பல சவால்கள் இருக்கும் என்பதை உணர்ந்துள்ளதாகவும், ஆனால் இந்தச் சூழலை ஒரே அணியாகச் சிறப்பாகக் கையாள முடியும் என்று நம்புவதாகவும் கில் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு அணியை எதிர்கொள்வது எப்போதுமே கடினமான விஷயம். இருப்பினும், இந்த சவாலை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளது என்றும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சுப்மன் கில்லின் தொடர்ச்சியான கிரிக்கெட் விளையாட்டுக் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள், மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் என தொடர்ந்து பங்கேற்ற கில், தற்போது வெறும் 5 நாள் இடைவெளியில் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
கில்லுக்கு டி20 கிரிக்கெட்டில் ஓய்வு அளித்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர். மேலும், இந்திய அணி நிர்வாகம், கில்லினை மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து, தேவையில்லாமல் அவரது ஆட்டத் திறனை (Form) பாதிக்கப் போகிறது என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
