"பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு வராது!" – டி20 உலகக் கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற கோரிக்கை!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க விருக்கும் நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது.
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க விருக்கும் நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது. தங்கள் அணி இந்தியாவுக்கு வர மறுத்துள்ளதுடன், தங்கள் அனைத்துப் போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) முன் அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முடிவுக்கு முன்னோட்டமாக, ஐபிஎல் 2026 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் சேர்ந்திருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், சமீபத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு பின்னணியில், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், இந்தியாவில் சில வலதுசாரி குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட பதட்டங்களும் இருந்தன. சமூக ஊடகங்களில் முஸ்தாபிசுருக்கு எதிரான பரப்புரைகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் KKR அவரை நீக்கியது.
இந்தச் சூழல், கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக நடத்த முடியாமல் அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் கிரிக்கெட்டில் ஊடுருவியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஜனவரி 4, 2026 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், BCB கூறியிருப்பதாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், இந்தியாவில் பங்களாதேஷ் அணி பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. பங்களாதேஷ் அரசின் ஆலோசனையுடன், தற்போதைய சூழ்நிலையில் அணி இந்தியாவுக்குச் செல்லக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது."
BCB, வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய, போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. மேலும், ஐசிசி இந்த விஷயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்துள்ளது.
இந்த முடிவு, உலக கிரிக்கெட் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பங்களாதேஷ், இந்தியாவுடனான தொடர்களில் பலமுறை பங்கேற்றிருந்தாலும், தற்போதைய சமூக-அரசியல் சூழல் காரணமாக பாதுகாப்பு முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
