ஒன்பதாவது முறையாக வாகைசூடிய இந்தியா; கோப்பையைப் பெற மறுத்ததால் புதிய சர்ச்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறது.
இந்த நடப்புத் தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றையும் சேர்த்து இந்திய அணி பாகிஸ்தானை மொத்தம் மூன்று முறை வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம், ஆசிய கிரிக்கெட்டில் தாங்கள் தான் கிங் என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்துள்ளது.
கோப்பை வழங்குவதில் எழுந்த எதிர்ப்பு
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, வீரர்கள் கோப்பையை வாங்கி கொண்டாடலாம் என்று காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், கோப்பையை வழங்க வருபவர் பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோஷின் நக்விதான் என்று தெரிந்தவுடன், அதற்கு இந்திய அணி எதிர்ப்புத் தெரிவித்தது.
மோஷின் நக்வியின் கையால் தாங்கள் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய வீரர்கள் போர்க் கொடி தூக்கினர். ஆனால், "நான்தான் கோப்பையை வழங்குவேன். இல்லையென்றால் என்னிடம் இன்று வாங்கிக் கொள்ளாதீர்கள்" என்று மோஷின் நக்வி பிடிவாதமாக இருந்தார்.
மோஷின் நக்வியின் நிலைப்பாட்டிற்குப் பிறகு, இந்திய அணி இன்று கோப்பையை வாங்கவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
எனினும், கோப்பையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இந்திய வீரர்கள் கோப்பையில் இருப்பது போல் நடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா எவ்வாறு கோப்பையை வாங்கிக் கொண்டு நடந்து வந்தாரோ, அதைப் போலவே, இந்திய அணியின் சூர்யகுமார், கோப்பையே இல்லாமல் வெறுங்கையால் நடித்து ரோகித் சர்மா போல் நடந்து வந்தார்.
அவர் கோப்பையே இல்லாமல், அதனைத் தனது அணி வீரர்களிடம் கொடுப்பது போல் நடித்தார். உடனே வீரர்களும் கோப்பையே இல்லாமல், கோப்பையை வாங்குவது போல் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதன் மூலம், உண்மையான பரிசளிக்கும் நிகழ்ச்சி எப்படி நடக்குமோ, அதேபோல் கோப்பையே இல்லாமல் இந்திய வீரர்கள் செய்து காட்டினர். இந்திய அணியின் இந்தக் கொண்டாட்டம் பாகிஸ்தான் அமைச்சரான மோஷின் நக்விக்கு சரியான நோஸ்கட்டாக மாறி இருக்கிறது. இந்திய அணியின் இந்தக் கொண்டாட்டம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
