இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் சந்திப்பில் சர்ச்சை! நடுவில் ரஷித் கான்... திட்டமிட்ட ஏற்பாடா?
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவையும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவையும் பிரித்து, நடுவில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா மற்றும் கேப்டன்களின் பத்திரிகையாளர் சந்திப்பு துபாயில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்ட நிலையில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவையும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவையும் பிரித்து, நடுவில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்திய மற்றும் பாகிஸ்தான் கேப்டன்களுக்கு நடுவில் ரஷித் கான் அமர்ந்திருந்தது பல கேள்விகளை எழுப்பியது. இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் உருவானது. இந்த நிகழ்வை நேரில் பார்த்த "கலீஜ் டைம்ஸ்" பத்திரிகையாளர் ரிதுராஜ் போர்ககோட்டி, இது திட்டமிட்டே செய்யப்பட்ட ஏற்பாடு என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
"இந்திய கேப்டனும், பாகிஸ்தான் கேப்டனும் அருகருகே அமரவில்லை என்பதை நான் கவனித்தேன். சூர்யகுமார் யாதவிற்கும், சல்மான் ஆகாவிற்கும் இடையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமர்ந்திருந்தார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது திட்டமிட்ட ஏற்பாடா என்று கேட்டதற்கு, "எனக்கும் அப்படித்தான் தோன்றியது" என்றும், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, இரு கேப்டன்களையும் தனித்தனியாக அமர வைக்கும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். அதனால்தான் ரஷித் கான் நடுவில் அமர வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, இதுபோன்ற ஒரு சிறிய நடவடிக்கைகூட உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தத் தொடர் முதலில் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினை காரணமாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான பதற்றம் நிலவி வரும் சூழலில், செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "களத்தில் இறங்கும்போது ஆக்ரோஷம் எப்போதும் இருக்கும். ஒருவிதமான ஆக்ரோஷம் இல்லாமல் இந்த விளையாட்டை விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை. களத்தில் இறங்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்," என்று உறுதியாகக் கூறினார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் "வீரர்களிடம் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். களத்தில் ஆக்ரோஷமாக இருக்க விரும்பினால், அவர்கள் அதைச் செய்ய முழு சுதந்திரம் உள்ளது" என்றார்.
மேலும் அவர், "வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போதும் ஆக்ரோஷமாகவே இருப்பார்கள். அதை உங்களால் நிறுத்த முடியாது. அதுதான் அவர்களை முன்னோக்கிச் செல்ல வைக்கிறது. எனவே, களத்தில் இருக்கும் வரை யாருக்கும் எந்த அறிவுறுத்தலும் என் தரப்பிலிருந்து இருக்காது" என்று கூறினார்.
முன்னதாக, 2025 ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில், அமீரக அணி வெறும் 57 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் (4 விக்கெட்டுகள்) மற்றும் சிவம் துபே (3 விக்கெட்டுகள்) சிறப்பாக பந்துவீசி அசத்தினர். அபிஷேக் ஷர்மா (30 ரன்கள், 16 பந்துகள்) அதிரடியாக விளையாடி இந்தியாவை 4.3 ஓவர்களில் வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.
