இந்தியா ஏ அணியின் திரில் வெற்றி: சதம் தவறவிட்ட பண்ட்; மானத்தைக் காத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.

இந்தியா ஏ அணியின் திரில் வெற்றி: சதம் தவறவிட்ட பண்ட்; மானத்தைக் காத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.

பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய 'ஏ' அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க 'ஏ' அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய 'ஏ' அணி, முதல் இன்னிங்ஸில் 234 ரன்கள் மட்டுமே எடுத்ததால், தென்னாப்பிரிக்க 'ஏ' அணி 75 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க 'ஏ' அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணிக்கு 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

275 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியபோது, துவக்க வீரர் சாய் சுதர்சன் 12 ரன்களிலும், ஆயுஸ் மாத்ரே 6 ரன்களிலும், தேவுதட் படிக்கல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து அணி தடுமாற்றம் கண்டது.

ஓர் கட்டத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில், ரஜத் பட்டிதார் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், ரஜத் பட்டிதார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பண்ட் தனது அரைசதத்தை அடித்து களத்தில் நின்றார்.

கடைசி நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில், இந்திய அணி 119 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற நிலையில் இருந்தது, வெற்றிக்கு மேலும் 156 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பண்ட், 113 பந்துகளை எதிர்கொண்டு 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இந்த ஆட்டத்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும், இதன் மூலம் அவர் சதத்தை தவறவிட்டார்.

அதன் பின்னர், ஆயுஷ் பதோனி 34 ரன்களில் ஆட்டம் இழந்தபோது, ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கீழ் வரிசை வீரர்களான தனுஷ் கோட்டியான் 23 ரன்களும், மனவ் சுதர் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும், சிஎஸ்கே அணியின் பவுலரான அன்சூல் காம்போஜ், கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, 46 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில், இந்திய 'ஏ' அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி, முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. இந்த இரு இன்னிங்ஸ்களிலும் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தனுஷ் கோட்டியான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியானது வரும் வியாழக்கிழமை (ஆறாம் தேதி) தொடங்குகிறது.