41 ஆண்டுகளில் முதல்முறை: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன.

41 ஆண்டுகளில் முதல்முறை: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் ஒரே நேரத்தில் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தகுதி பெற்றது எப்படி?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது சூப்பர் 4 ஆட்டத்தில், வங்கதேச அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி துபாயில் விளையாடியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் ஓவரில் இருந்தே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை அளித்தனர்.

இதனால் பதற்றம் அடைந்த வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் கால் பதித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக, வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. கடந்த 41 ஆண்டுகளில் 17 முறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டிருந்தாலும், ஒருமுறை கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடியதே இல்லை. தற்போது முதல் முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்தப் போட்டி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தான் அணியை 2 முறை வீழ்த்தி இருக்கிறது. அந்த 2 முறையும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி விளாசியது என்றே சொல்லலாம்.

ஆனாலும், பாகிஸ்தான் அணி நாக் அவுட் போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய அணி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இன்று  இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது,  அதன்பின் ஒருநாள் இடைவேளைக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

இந்தப் போட்டி அதே துபாய் மைதானத்தில் நடப்பதால், பிட்சில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நம்பப்படுகிறது. இந்தப் போட்டியிலும் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசியக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.