அஸ்வின் உட்பட ஐந்து வீரர்களை நீக்க சென்னை அணி தீர்மானம் முடிவு.. பட்டியல் இதோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து உள்ளது.
அதன்படி, தற்போது இளம் வீரர்களுக்கு முதற்கட்டமாக போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து, இந்த ஆண்டு சரியாக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சங்கர்
2025 ஐபிஎல் ஏலத்தில் 1.20 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட விஜய் சங்கர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மோசமாகச் செயல்பட்டார். 6 போட்டிகளில் விளையாடி 118 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவர் அரை சதம் அடித்த போட்டிகளிலும் கூட நிதானமாக ஆடியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தமுவியது. இதனால், அவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.
டெவான் கான்வே
சென்னை அணியில் டெவான் கான்வேவுக்கு அடுத்த ஆண்டு இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டெவான் கான்வே, 16 போட்டிகளில் 672 ரன்கள் சேர்த்திருந்தார். 2024 ஆம் ஆண்டில் காயம் காரணமாக விளையாடாத அவர், இந்த முறை 3 போட்டிகளில் விளையாடி 94 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
ராகுல் திரிபாதி
கடந்த ஐபிஎல் ஏலத்தில் 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ராகுல் திரிபாதி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டு வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தொடர வாய்ப்பு இல்லை என்று பார்க்கப்படுகின்றது.
தீபக் ஹூடா
2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 1.70 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தீபக் ஹூடா, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், அடுத்த ஆண்டு சென்னை அணியில் இருக்க மாட்டார் என கூறப்படுகின்றது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நீண்ட காலத்திற்குப் பிறகு இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின், 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றம் அளித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலையில், அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்த நிலையில், அவ்வளவு பெரிய தொகையை அடுத்த ஆண்டும் அவருக்கு அளித்து, அவரை வெளியே அமர வைக்க முடியாது என்பதால், அவருக்கு அளிக்கும் சம்பளத்தை வைத்து வேறு வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கலாம்.
இதேவேளை, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடா ஆகிய மூன்று வீரர்களுக்கும் சரியாக விளையாடாததால் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த ஐந்து வீரர்களை நீக்கினால், 2026 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கணிசமான தொகை கிடைக்கும். அதனை வைத்து சிறந்த வீரர்களை வாங்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.