ஸ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட் ஆடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயிற்சி தொடங்கவே 2 மாதம் ஆகுமாமே!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று ஒரு கடினமான கேட்சைப் பிடித்தார். ஆனால், கேட்ச் பிடித்த பிறகு அவர் தரையில் விழுந்த விதம் தவறாக அமைந்ததால், அவருக்கு வயிற்றில் பலத்த அடிபட்டது.
உடனடியாக வலியால் துடித்த அவருக்கு, இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் மைதானத்திலேயே முதலுதவி அளித்தார். வலியுடன் அவர் மைதானத்தை விட்டு தானாகவே வெளியேறினாலும், இந்திய அணியின் உடை மாற்றும் அறைக்குச் சென்ற பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்து, மயக்கமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ-வில்) அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில், ஸ்ரேயாஸ் ஐயரின் அடிவயிற்றில் ஏற்பட்ட பலத்த அடியால் அவரது மண்ணீரலில் கிழிவு (Laceration) ஏற்பட்டு, உள் ரத்தக்கசிவு உண்டானது கண்டறியப்பட்டது. இந்த உள் ரத்தக்கசிவை நிறுத்த, அவருக்கு "இன்டர்வென்ஷனல் டிரான்ஸ்-கதீட்டர் எம்போலைசேஷன்" என்ற நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது, இரத்தக் குழாய் வழியாக ஒரு சிறிய குழாயைச் செலுத்தி, கசிவு ஏற்படும் பகுதியை அடைக்கும் ஒரு நுட்பமான மருத்துவ முறையாகும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அக்டோபர் 25 அன்று ஏற்பட்ட காயம் உடனடியாகக் கண்டறியப்பட்டு, ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை சீராக உள்ளதுடன், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அக்டோபர் 28 அன்று எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிவதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது.
பிசிசிஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும். ஸ்ரேயாஸ் ஐயருடன் இருப்பதற்காக அவரது சகோதரியை சிட்னிக்கு அனுப்ப பிசிசிஐ ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ள தகவல்படி, தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பயிற்சியை தொடங்கவே இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும்.
இந்தக் காயம் காரணமாக, ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட வாய்ப்புள்ள முக்கியத் தொடர்கள்
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவர் முழுமையாகத் தவறவிடுவார்.
அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
இந்திய அணியின் மிடில்-ஆர்டரில் ஒரு நம்பிக்கைக்குரிய வீரராக வலம் வரும் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தத் திடீர் காயம், வரவிருக்கும் முக்கியத் தொடர்களில் அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இரண்டு மாதம் கழித்து அவர் பயிற்சிகளை துவக்கினாலும், உடனடியாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
