கனடாவில் தொடர்ந்து வெளிநாட்டு விமான ஊழியர்கள் மாயம் — வெளியான பின்னணி!
மூத்த விமானப் பணிப்பெண்களான ஆசிப் நஜாம், நவம்பர் 16 அன்று லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொரோண்டோ வந்தார். மூன்று நாட்களுக்கு பிறகு அவர் திரும்ப வேண்டிய PK-798 விமான பணிக்கு வரவில்லை
பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) சார்ந்த பணியாளர்கள் கனடாவுக்கு சென்ற பிறகு அங்கேயே மாயமாகி விடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது.
மூத்த விமானப் பணிப்பெண்களான ஆசிப் நஜாம், நவம்பர் 16 அன்று லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொரோண்டோ வந்தார். மூன்று நாட்களுக்கு பிறகு அவர் திரும்ப வேண்டிய PK-798 விமான பணிக்கு வரவில்லை. நிறுவனத்தினர் தொடர்பு கொண்டபோது உடல்நலக்குறைவு என தெரிவித்துள்ளார்; பின்னர் அவரது மொபைல் போன் அணைக்கப்பட்டு, அவர் காணாமல் போனதாக பதிவானது.
இந்த ஆண்டு மட்டும் இதே போல மூன்று PIA பணியாளர்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். கடந்த ஆண்டு நான்கு பேர், 2022–23 காலத்தில் எட்டு பேர் என கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 15 ஊழியர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024-இல் இஸ்லாமாபாத்–டொரோண்டோ பயணத்தில் இருந்த ஒரு விமானப் பணிப்பெண் கூட டொரோண்டோவில் தங்கியபடியே மாயமானார். அவரது விடுதி அறையில் “Thank you PIA” என எழுதப்பட்ட ஒரு குறிப்பும் கிடைத்தது.
இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார சிக்கல்கள், குறைந்த ஊதியம், தனியார் மயமாகும் ஆபத்து காரணமாக வேலை பாதுகாப்பு குறைவு ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும் கனடாவின் அகதி சட்டத்தில் உள்ள சலுகைகளை பயன்படுத்தி அங்கேயே தங்க முயற்சி செய்கிறார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
விமான ஊழியர்களுக்கு வழக்கமான விசா தேவையில்லாததாலும், கனடா விமான நிலையத்திலேயே புகலிடம் கோர முடியும் என்பதாலும், இத்தகைய முயற்சிகள் எளிதாகும் நிலையில் உள்ளன. புகலிடம் கோரியவர்கள் வழக்கு முடியும் வரை நாட்டில் தங்கி, வேலை செய்து, இலவச மருத்துவ சேவைகளையும் பெற அனுமதி உண்டு. இந்த செயல்முறை பல ஆண்டுகள் நீண்டுவிடக்கூடும்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க பாஸ் பத்திரங்கள் (bond) பெறுதல், பாஸ்போர்ட் பறிமுதல், கனடாவுக்கு செல்லும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வயதை 50 ஆக உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் PIA எடுத்திருந்தாலும், மாயம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
