“சீனியர்களைச் சீண்டாதீர்கள்” எதிர்பாராத ட்விஸ்ட்.. கம்பீர், அகர்கர் திட்டத்தை உடைத்தெறிந்த கோலி, ரோஹித்!

இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.

“சீனியர்களைச் சீண்டாதீர்கள்” எதிர்பாராத ட்விஸ்ட்.. கம்பீர், அகர்கர் திட்டத்தை உடைத்தெறிந்த கோலி, ரோஹித்!

 2027 உலகக்கோப்பையை முன்னிட்டு ஒருநாள் அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை ஓரம் கட்டும் திட்டத்தில் இருந்ததாக கூறப்பட்ட தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கருக்கு, இந்திய சீனியர்கள் மைதானத்திலேயே பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான். குறிப்பாக தொடர் நாயகன் விராட் கோலி, 2025 ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து, டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் சீனியர்களை ஒதுக்கி வைத்து இளம் வீரர்களை முன்னிறுத்தும் திட்டம் நடைமுறையில் இருந்தது. இதே போக்கில் ஒருநாள் அணியிலும் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியது. ஆனால் ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மைதானங்களில் ரோஹித் மற்றும் கோலி வெளிப்படுத்திய அதிரடி கோப்பைக்கு மேல் பேசப்பட்ட முக்கிய அம்சமாக மாறியது.

இந்தத் தொடரில் விராட் கோலி மூன்று போட்டிகளில் 302 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு சதங்களும் ஒன்றரை சதமும் அடங்கும். சராசரி 151, ஸ்ட்ரைக் ரேட் 117.05 என  ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை அவர் மீண்டும் நிரூபித்தார்.

2025ஆம் ஆண்டின் ரன்-சேகரிப்பு பட்டியலிலும் முதல்வரிசையில் விராட் கோலி (651 ரன்கள் – 13 இன்னிங்ஸ்), அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா (650 ரன்கள் – 14 இன்னிங்ஸ்) ஆகிய இருவரும் திகழ்கிறார்கள். ஒரு ரன் வித்தியாசத்தில் முதலிரண்டு இடங்களையும் பிடித்திருப்பது சீனியர்கள் இன்னும் இந்திய அணியின் முக்கிய தூண்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது.

“ரோஹித்–கோலியை நீக்கினால் இந்திய அணிக்குத்தான் இழப்பு. இப்போது கம்பீர்–அகர்கர் இந்த சீனியர்களைச் சீண்டாதீர்கள்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தொடரின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2027 உலகக்கோப்பைக்கு இந்தியாவின் நம்பிக்கை மற்றும் பொறுப்பு மீண்டும் ரோஹித்–கோலி கைகளில் உறுதியாக இருப்பது மேலும் தெளிவாகியுள்ளது.