சட்டங்களை மீறினால் விசா ரத்து – இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் அந்நாட்டின் சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெளிவான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், அவரது மாணவர் விசா உடனடியாக ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்க விசா பெறும் தகுதியையும் இழக்க நேரிடும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விழிப்புணர்வு செய்தி, தூதரகத்தின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், “அமெரிக்க விசா என்பது ஒரு சலுகை; தனிநபர் உரிமை அல்ல” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது. எனவே, மாணவர்கள் விதிகளை மதித்து நடந்து, தங்கள் பயண மற்றும் படிப்பு வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அது வலியுறுத்துகிறது.
