அணிக்காக அனைத்தையும் கொடுத்த ரோஹித்... தூக்கி எறிந்த பிசிசிஐ.. பொங்கிய ரசிகர்கள்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து, சமூக வலைதளங்கள் போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன. 

அணிக்காக அனைத்தையும் கொடுத்த ரோஹித்... தூக்கி எறிந்த பிசிசிஐ.. பொங்கிய ரசிகர்கள்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து, சமூக வலைதளங்கள் போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) இந்த முடிவுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் சர்மாவுக்கு இதைவிட சிறந்த கௌரவம் கிடைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வீரர்களாகத் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் தலைமையில் அவர்கள் விளையாட உள்ளது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை "ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று வர்ணித்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சாதனைகளைச் சுட்டிக்காட்டி, பிசிசிஐயின் இந்த நடவடிக்கையை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக, மூன்று ஐசிசி வெள்ளைப் பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் தொடர்களின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே. அவர் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுகொடுத்தார்.

ஒரு பிரபல கிரிக்கெட் பதிவர், "2023 உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் 10 வெற்றிகள், தோல்வியே சந்திக்காத 2024 டி20 உலகக்கோப்பை, தோல்வியே சந்திக்காத 2025 சாம்பியன்ஸ் டிராபி. 8 மாதங்களில் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற பிறகு கேப்டன் ரோஹித்தின் சகாப்தம் முடிகிறது" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் ரோஹித்தின் கேப்டன்சி புள்ளிவிவரங்களும் வியக்கத்தக்க வகையில் உள்ளன; அவர் கேப்டனாகச் செயல்பட்ட 56 போட்டிகளில் 42-ல் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 76% ஆகும். இவ்வளவு சிறப்பான சாதனைகளைக் கொண்ட ஒரு கேப்டனை, பதவியிலிருந்து நீக்கிய விதம் சரியல்ல என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு விராட் கோலி ரசிகர் கூட, ரோஹித் இந்திய அணிக்குத் தனது அனைத்தையும் கொடுத்தார், ஆனால் பிசிசிஐ அவரை மிகவும் மோசமாக நடத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்துப் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன்சி மாற்றம் குறித்து ரோஹித் சர்மாவிடம் பேசிவிட்டதாகவும், அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையேயான உரையாடல் என்பதால், அது குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். இருப்பினும், 2027 உலகக்கோப்பையில் ரோஹித் மற்றும் கோலி பங்கேற்பது குறித்துக் கேட்டபோது, "அவர்கள் தற்போது இந்த வடிவத்தில் விளையாடுகிறார்கள், அதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 2027 உலகக்கோப்பை குறித்து இப்போது பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன்" என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார். அகர்கரின் இந்தப் பதிலானது, ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தேர்வுக்குழு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருந்தாலும், இந்திய கிரிக்கெட்டின் இரண்டு மாபெரும் கோப்பைகளை வென்றுகொடுத்த ஒரு கேப்டனை நடத்திய விதம், பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.