இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான மூன்று காரணங்கள்: அதிலும் முக்கிய காரணம் இதுதான்!

முதல் இரண்டு போட்டிக்கான பிட்ச், பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டிக்கான பிட்ச், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டது.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான மூன்று காரணங்கள்: அதிலும் முக்கிய காரணம் இதுதான்!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிக்கான பிட்ச், பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டிக்கான பிட்ச், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸில், இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டன. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சதம் அடித்த நிலையில், இந்திய தரப்பில், கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இறுதியில், முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் 387 ரன்களை எடுத்து, சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து, கடைசி இரண்டு இன்னிங்ஸின்போது, பிட்ச் பௌலர்களுக்கு சாதகமாக மாறியது. லோ பவுன்ஸ் அதிகமாக இருந்தது. அவ்வபோது, எக்ஸ்ட்ரா பவுன்ஸும், ஸ்விங்கும் இருந்ததால், இங்கிலாந்து அணியானது, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 192/10 ரன்களை மட்டும்தான் எடுத்தது. 

அதிகபட்சமாக, ஜோ ரூட் 40 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களையும் அடித்தார்கள். இந்திய அணியில் இருந்த பேட்டர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருந்த காரணத்தினால், நிச்சயம் இந்த இலக்கை துரத்தி, இந்தியா வென்றுவிடும் என்றுதான் கருதப்பட்டது. 

ஆனால், டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல் மட்டுமே 30+ ரன்களை அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (0), கருண் நாயர் (14), கேப்டன் ஷுப்மன் கில் (6), ரிஷப் பந்த் 9 (12) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.

இறுதிக் கட்டத்தில், ரவீந்திர ஜடேஜா 61 ரன்களை எடுத்து போராடினார். ஆனால், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பியதால், இந்திய அணி 170/10 ரன்களை மட்டும் எடுத்து, 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான மூன்று முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸ் விளையாடியபோது, 9ஆவது இடத்தில் களமிறங்கிய ப்ரைடன் கர்ஸ் 56 ரன்களை குவித்து அசத்தினார். பொதுவாக இவர் பெரிய பேட்டரே கிடையாது. 19 சராசரியில்தான் ரன்களை அடிக்க கூடியவர். இவர் முதல் முறையாக, இப்போட்டியின் மூலம் அரை சதம் அடித்தார். இவரது விக்கெட்டை விரைந்து வீழ்த்தாதது, பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இரண்டாவது இன்னிங்ஸில், வாஷிங்டன் சுந்தரை, கடைசி நேரத்தில்தான் பந்துவீச வைத்தார்கள். அப்போது, அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட்களை எடுத்தார். மேலும், 12 ஓவர்களில் 22 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் கூட, கடைசி நேரத்தில்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

அதிலும், மற்ற பந்துவீச்சாளர்களை விட குறைவான ரன்களைதான் விட்டுக்கொடுத்தார். அதிக ஓவர்களை வழங்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில், சுந்தரை முன்கூட்டியே கொண்டு வந்திருந்தால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் எனக் கருதப்படுகிறது.

முதல் இன்னிங்ஸில், பைஸில் மட்டும் 11 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில், பைஸில் மட்டும் 25 ரன்கள். இப்படி, 36 ரன்களை பைஸில் மட்டுமே, இந்தியா விட்டுக்கொடுத்தது. இதுதான், தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.