ஆப்பு வெனிசுலாவுக்கு அல்ல... சீனாவுக்கு செக் வைத்த அமெரிக்கா... ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு
வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.
அமெரிக்கா வெனிசுலா அரசியலில் நேரடியாக தலையிட்டு, அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த நிலையில், உண்மையான பாதிக்கப்படுபவர் சீனா என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.
21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே வெனிசுலாவின் பெருமளவிலான இயற்கை வளங்கள் — கச்சா எண்ணெய், இரும்புத் தாது, தங்கம், அரிய மண் கனிமங்கள், பாக்சைட், டைட்டானியம், நிக்கல் போன்றவை — சீனாவின் விரிவான மூலோபாயத்தின் மையமாக இருந்தன. வெனிசுலாவின் கம்யூனிஸ்ட்-நிலைப்பாடு கொண்ட அரசு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்ப முடியாத சூழலில், சீனாவை நம்பியது. இதன் மூலம் இரு நாடுகளும் ஒரு பொருளாதார கூட்டணியை உருவாக்கின.
2008-இல் சைனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CNPC), வெனிசுலாவின் PDVSA உடன் இணைந்து "பெட்ரோசினோவென்ஸா" எனும் கூட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. வெனிசுலா தினசரி 9 லட்சம் பீப்பாய் எண்ணெயில் 8 லட்சம் பீப்பாய்களை சீனாவுக்கு அனுப்பியது. பதிலாக, சீனா வெனிசுலாவின் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, சுரங்கத்துறை மற்றும் எரிசக்தி துறைகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.
ஹுவாவே மற்றும் ZTE போன்ற சீன நிறுவனங்கள், வெனிசுலாவின் 4G தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு முதல், அரசு மானியத் திட்டங்களுக்கான "ஹோம்லேண்ட் கார்டு" வரை முக்கிய பங்காற்றின. இந்த நெருங்கிய பந்துகள் அரசியல் மட்டத்திலும் தொடர்ந்தன – மதுரோ கைதுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், சீனாவின் லத்தீன் அமெரிக்க பிரதிநிதியைச் சந்தித்து பேசியிருந்தார்.
ஆனால் 2017-இல் அமெரிக்கா வெனிசுலா மீது தடைகளை விதித்தது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, வெனிசுலாவின் பொருளாதாரத்தை உலுக்கியது. அதன் விளைவாக, சீனாவுக்கான கடன் திருப்பிச் செலுத்தும் திறன் பாதிக்கப்பட்டது. இப்போது அமெரிக்கா மதுரோவைக் கைது செய்து, நாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் மூலதன ஆதிக்கத்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சி என்றாலும், அதன் மற்றொரு முக்கிய நோக்கம் – சீனாவின் உலகளாவிய செல்வாக்கை குறைப்பது – என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, அமெரிக்காவின் "வெனிசுலா திருப்பம்" வெனிசுலாவுக்கு விட சீனாவுக்குத்தான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்காவில் சீனா உருவாக்கிய பொருளாதார மற்றும் புவியியல் செல்வாக்கும் தற்போது தீவிர ஆபத்தில் உள்ளது.
