இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் நீக்கப்பட்டது ஏன்? அகார்கர் கொடுத்த விளக்கம்!
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வு குழுத் தலைவர் அகார்கர், சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் வீரர்கள் கொண்ட அணியை இன்று (மே 24) அறிவித்தார்.

இந்திய அணியானது வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு செல்லவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வு குழுத் தலைவர் அகார்கர், சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் வீரர்கள் கொண்ட அணியை இன்று (மே 24) அறிவித்தார்.
ஜெயஸ்வால், ராகுல், ரிஷப் பண்ட், கருண் நாயர் போன்ற வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், சிராஜ், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களுக்கு பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாக்கூர், நிதீஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளதுடன், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் அணியில் முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக விளையாடிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் அணியில் இடம் வழங்கப்படாமை குறித்து விளக்கம் அளித்துள்ள அஜித் அகார்கர், ஸ்ரேயாஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து உள்ளார். இருந்தாலும், தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸுக்கு இடம் இல்லை என்று கூறினார்.
அத்துடன், முகமது ஷமியை ஆய்வு செய்த மருத்துவக்குழு அவர் காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை என்றும் இதனால் இங்கிலாந்து தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் கூறியிருந்தார்கள். கடந்த வாரம் அவருக்கு ஒரு காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரால் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடியாது என தெரியவந்தது.
ஷமி முழு உடல் தகுதியை எட்டாத நிலையில் அவருக்காக காத்திருப்பது சரியான விஷயமாக இருக்காது என்று முடிவெடுத்தோம். இது உண்மையிலேயே துரதிஷ்டவசமானது. முழு உடல் தகுதியுடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை நிச்சயம் தேர்வு செய்து இருப்போம் என்று அஜித் அகார்கர் கூறியுள்ளார்.