ஜிம்பாப்வேவை கதற விட்ட இங்கிலாந்து அணி.. இந்திய டெஸ்ட் அணிக்கு எச்சரிக்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டெஸ்ட் வெற்றியை பெற்று உள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் வரிசையாக சதம் அடித்தனர். துவக்க வீரர் ஜாக் கிரவுலி 124 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட் 140 ரன்களும், ஓலி போப் 171 ரன்களும் எடுத்தனர்.
அதன் பிறகு ஜோ ரூட் 34 ரன்களும், ஹாரி புரூக் 50 பந்துகளில் 58 ரன்களும் சேர்த்தனர். பென் ஸ்டோக்ஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 565 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியும் முதலில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஃபாலோ-ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் துவக்க வீரர் பிரையன் பென்னட் 139 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆடிய ஜிம்பாப்வே அணி இந்த முறை 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஷான் வில்லியம்ஸ் 88 ரன்களும், சிக்கந்தர் ரசா 60 ரன்களும் எடுத்திருந்தனர். இதை அடுத்து இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் முதல் இன்னிங்சில் 16.4 ஓவர்கள் வீசி 62 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் 18 ஓவர்களில் 81 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.