இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகன வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகன வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுகின்றது.
தேசிய மக்கள் சக்தி, இலங்கை அரசியலை பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பதால் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களின் 4,877 தேர்தல் வட்டாரங்களுக்காக, 13,759 வாக்குப்பதிவு மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்தது.
இலங்கையின் தேர்தல் கலாசாரத்தின்படி, உள்ளூர் தேர்தல்களில் வாக்காளர் வாக்குப்பதிவு, தேசிய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்து வருகிறது.
கடந்த இரண்டு தேசிய தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டிய கடுமையான அழுத்தத்தில் உள்ளது.
இல்லையெனில் அதன் பலவீனமான தலைமைக்கு கடினமான விடயமாகவே இந்த தேர்தல் அமையும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுன நாடு முழுவதும் பிரசாரம் செய்தது. ஒரு காலத்தில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக இருந்த அந்தக்கட்சி, கடந்த தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது.
இந்தநிலையில் நாமல் ராஜபக்ஷ, இப்போது குடும்பத்தின் கடந்தகால அரசியல் மகிமையை மீட்டெடுக்கும் சவாலை எதிர்கொள்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வஜன பலய ஆகியவை களத்தில் உள்ள ஏனைய இரண்டு கட்சிகளாகும்.
இந்தநிலையில், தேர்தல்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் சக்தியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.