இந்திய அணி வீரர்களுக்கு இந்த டெஸ்ட் வைத்தால் அவ்வளவுதான்... எச்சரித்த அஸ்வின்.. பிசிசிஐ என்ன செய்ய போகிறது?
இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 'யோ-யோ' டெஸ்டுக்குப் பதிலாக, தற்போது 'பிரான்கோ' என்ற புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 'யோ-யோ' டெஸ்டுக்குப் பதிலாக, தற்போது 'பிரான்கோ' என்ற புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய பரிசோதனையானது வீரர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பதுடன், காயங்களுக்கும் வழிவகுக்கும் என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சந்தேகம் எழுப்பியுள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரக்ஃபி மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் ஏரோபிக் சகிப்புத்தன்மையை சோதிக்க இந்த பிரான்கோ டெஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.
இதில் வீரர்கள் 20 மீட்டர், 40 மீட்டர் மற்றும் 60 மீட்டர் தூரத்தை தலா ஐந்து முறை என மொத்தம் 1200 மீட்டர் தூரத்தை ஓய்வின்றி ஓடி முடிக்க வேண்டும். எவ்வளவு குறைந்த நேரத்தில் இதை முடிக்கிறார்களோ, அந்தளவிற்கு அவர்களின் உடற்தகுதி சிறப்பாக இருப்பதாகக் கருதப்படும்.
இதுகுறித்து பேசியுள்ள அஸ்வின், "அணியின் உடற்பயிற்சி நிபுணர்கள் மாறும்போது, சோதனை முறைகளும் மாறுகின்றன. பயிற்சி திட்டங்களும் மாறுகின்றன. இப்படி அடிக்கடி மாற்றங்கள் நிகழும்போது, வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்," என்று கூறியுள்ளார்.
"ஒரு வீரராக, தொடர்ந்து பயிற்சி முறைகளை மாற்றிக்கொண்டே இருப்பது மிகவும் கடினம். பல சமயங்களில் இது காயங்களுக்குக் கூட வழிவகுத்துள்ளது. இதை நான் மறுக்கவில்லை, எனக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
2017 முதல் 2019 வரை, எனக்கான சரியான பயிற்சி முறையைத் தேடி நான் அலைந்துள்ளேன். இந்த கஷ்டத்தை நான் அனுபவித்திருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இந்திய அணியின் புதிய வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அட்ரியன் லே ரூக்ஸ், இந்த புதிய டெஸ்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்மில் பயிற்சி செய்வதை மட்டும் நம்பியிராமல், தங்களது ஓட்டப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் மட்டுமே ஐந்து போட்டிகளிலும் விளையாடிய நிலையில், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதி குறித்து கேள்விகள் எழுந்தன. இதன் காரணமாகவே இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
