நக்வியின் புதிய நிபந்தனை: ஆசிய கோப்பை இந்தியாவுக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
கடந்த மாதம் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
கடந்த மாதம் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இருப்பினும், அந்த ஆசிய கோப்பை இதுவரை இந்திய அணியின் கைக்கு வராமல், துபாயில் உள்ள ஆசிய கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் உள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) கோப்பையை ஏற்க இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் உறுதியாக மறுத்ததே இதற்குக் காரணம்.
பகல்ஹாம் தாக்குதல் (Pagalgam attack) காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடவே எதிர்ப்பு இருந்த நிலையில், பிசிசிஐ (BCCI) மற்றும் இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சூர்யகுமார் யாதவ் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்துள்ளார்.
மறுபுறம், கோப்பையை தன் கையால்தான் வழங்குவேன் என மொஹ்சின் நக்வியும் உறுதியாக உள்ளார்.
இந்தச் சிக்கல் குறித்து மொஹ்சின் நக்வி மீது ஐசிசியிடம் (ICC) பிசிசிஐ புகார் அளித்துள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வழங்குவது தொடர்பாக நக்வி பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் விதித்துள்ள நிபந்தனை: இந்திய அணிக்கு கோப்பை வேண்டுமென்றால், அதனை நவம்பர் 10 ஆம் திகதி துபாயில் விழா நடத்தி அதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் கையால் கோப்பையை பெற்றுகொள்ளலாம்.
மேலும், அந்த விழாவில் இந்திய அணி வீரர்களும், இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும்.
நக்வி கையால் கோப்பையைப் பெற முடியாது என்ற முடிவில் இந்திய அணி உறுதியாக உள்ள நிலையில், நக்வி மீண்டும் அதை நிபந்தனையாக விதித்துள்ளதால், இந்திய அணியின் கைக்கு கோப்பை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
