ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் 'துருப்புச் சீட்டு' தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தான் – இர்பான் பதான் பாராட்டு!

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் 'துருப்புச் சீட்டு' தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தான் – இர்பான் பதான் பாராட்டு!

துபாய், செப். 4, 2025: 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய 'துருப்புச் சீட்டு' (X-Factor) வீரராக இருப்பார் என்று கணித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 10 ஆம் தேதி துபாய் மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

நடப்பு சாம்பியனாக இந்த ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணியானது பட்டத்தைத் தக்க வைக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி இன்று துபாய் சென்று அங்குள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து இர்பான் பதான் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: "பும்ராவைத் தவிர்த்துப் பார்த்தால், இந்திய அணியில் மற்றொரு எக்ஸ்-பேக்டர் வீரரைத் தேர்வு செய்வது கடினம்.

ஏனெனில் ஆல்-ரவுண்டர்களாக தற்போதைய இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் நல்ல பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனாலும், என்னைப் பொறுத்தவரை, தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதை நான் காண ஆவலாக உள்ளேன்".

வருண் சக்கரவர்த்தியின் கடந்த கால செயல்திறன் குறித்தும் பதான் குறிப்பிட்டார். அவர், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டி20 உலக கோப்பை தொடரின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர், தற்போது மீண்டும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

எனவே, இந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்காற்றுவார் என்று தான் நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த கருத்துக்கள், வருண் சக்கரவர்த்தி மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.