பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீர் நீக்கப்படுகிறாரா? லக்ஷ்மண் பெயர் குறித்த வதந்திகளை பிசிசிஐ திட்டவட்டமாக மறுப்பு
இந்தியா, 2026இல் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027இன் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட சொந்த மண் தொடரில் மோதவிருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படும் கௌதம் கம்பீரை பதவியிலிருந்து நீக்குவது குறித்த ஊடக வதந்திகளை பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜூலை 2024இல் இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டார். இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அண்மைய தோல்விகளைத் தொடர்ந்து அவரது பணித்தொடர்ச்சி குறித்து ஊடகங்களில் ஊகங்கள் பரவின. விவிஎஸ் லக்ஷ்மணன் புதிய தலைமைப் பயிற்சியாளராக பிசிசிஐ அணுகியதாக சனிக்கிழமை சில ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டன.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெளிவான மறுப்பை வெளியிட்டார். “இவை அனைத்தும் வதந்திகள் மட்டுமே. நாங்கள் யாரையும் விவாதிக்கவோ அணுகவோ இல்லை. கம்பீர் தனது ஒப்பந்தப்படி தொடர்வார்,” என்று அவர் தெரிவித்தார்.
விவிஎஸ் லக்ஷ்மணன் தொடர்பான செய்திகள் குறித்து அவர், “இவை முற்றிலும் தவறானவை; யூகத்தின் அடிப்படையிலான கற்பனைகள். சில மரியாதைக்குரிய ஊடகங்கள் கூட இவற்றை வெளியிட்டாலும், இதில் எந்த உண்மையும் இல்லை,” என்று வலியுறுத்தினார்.
“பிசிசிஐ இந்த அறிக்கைகளை திட்டவட்டமாக மறுக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை ஆதாரமற்ற கற்பனைகள் மட்டுமே,” என்று சைகியா உறுதிப்படுத்தினார்.
கம்பீர் பொறுப்பேற்ற காலகட்டத்தில், இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் 10 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிப் பெற்றாலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்விகளைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து, உள்நாட்டுத் தொடர்களில் இருமுறை ஒயிட்வாஷ் செய்யப்பட்ட முதல் இந்திய தலைமைப் பயிற்சியாளராகவும் கம்பீர் சோக வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
தற்போது நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 சுற்றில், இந்தியாவின் முதல் இரண்டு இடங்கள் பெறும் வாய்ப்பு கடுமையாக இருக்கிறது. மீதமுள்ள 9 போட்டிகளில் குறைந்தபட்சம் 7வில் வெற்றி பெற்றால் தான் இந்த இலக்கை அடைய முடியும்.
இந்தியா, 2026இல் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027இன் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட சொந்த மண் தொடரில் மோதவிருக்கிறது.
