2025 ஆசியக் கோப்பை: அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி -பிளேயிங் லெவன் என்ன?

துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.

2025 ஆசியக் கோப்பை: அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி -பிளேயிங் லெவன் என்ன?

துபாய்: 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்திய அணி தனது முதல் பயணத்தை இன்று (செப்டம்பர் 10) தொடங்குகிறது. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.

சுமார் ஏழு மாத கால இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்குவதால், அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

துணை கேப்டன் சுப்மன் கில் அணிக்குத் திரும்பியிருப்பது, பேட்டிங் வரிசையில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில், இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட் கீப்பருக்கான போட்டியில், சஞ்சு சாம்சனைப் பின்னுக்குத் தள்ளி, ஜிதேஷ் சர்மா முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக உருவெடுத்துள்ளார். அணியின் வியூகத்தைப் பொறுத்து, அவர் 6-வது அல்லது 7-வது இடத்தில் களமிறக்கப்படலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ஃபினிஷர் ரோலில் ரிங்கு சிங் களமிறங்கினால், கீழ் வரிசை பேட்டிங் மேலும் வலுப்படும். அதே சமயம், ஆல்-ரவுண்டரான சிவம் துபே ரிங்கு சிங்கிற்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. அபிஷேக் சர்மா ஆல்-ரவுண்டர் என்பதால், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்பட வாய்ப்பு உள்ளது.

பந்துவீச்சுப் படையைப் பொறுத்தவரை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மூன்றாவது பந்துவீச்சாளருக்கான இடத்தில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. துபாய் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம், இது இந்தியாவின் பந்துவீச்சுத் தாக்குதலுக்குக் கூடுதல் பன்முகத்தன்மையைக் கொடுக்கும்.

இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் / சிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் / குல்தீப் யாதவ்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நீங்கள் சஞ்சு சாம்சன் குறித்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றோம்" என்று முன்பு உறுதி அளித்திருந்தார்.

முன்னதாக, 2025 ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா உமர்சாய் 5 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஹாங்காங் பந்துவீச்சை புரட்டிப் போட்டார்.