இன்ஸ்டாகிராம் விருந்து; 07 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் அதிரடி கைது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது.

Mar 24, 2025 - 13:03
இன்ஸ்டாகிராம் விருந்து; 07 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் அதிரடி கைது

கொழும்பின் புறநகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட  விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பமுனுகம, உஸ்வெட்டகொய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து நேற்று (23) இரவு அங்கு பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டது.

இந்த விருந்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலும், அங்கு இருந்த 07 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், அவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!