ரோகித், கோலி தான் என்னுடைய சதத்திற்கு காரணம்.. ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால்

121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.

ரோகித், கோலி தான் என்னுடைய சதத்திற்கு காரணம்.. ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா–இந்தியா மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா இளம் திறமையான வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். 121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நன்றாக தொடங்கிய ஜெய்ஸ்வால், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்ட அவர், ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி, பின்னர் ரன்களை வேகமாக குவித்து சிறப்பான இன்னிங்ஸை ஆடியார்.

போட்டிக்குப் பிறகு தனது அனுபவங்களைப் பகிர்ந்த ஜெய்ஸ்வால், “இந்த இன்னிங்ஸை நான் மிகவும் ரசித்தேன். ரோகித் சர்மாவுடன் பேட்டிங் செய்தபோது, எப்படி இன்னிங்ஸை முன்னெடுக்க வேண்டும், எந்த வேகத்தில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதைக் குறித்து அதிகமாகப் பேசினோம். முதல் இரண்டு ஆட்டங்களில் முடியாததை இங்கே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடினேன்,” என்று கூறினார்.

அவர் மேலும், “தற்காப்பு மற்றும் அதிரடி ஆட்டத்தை சரியான சமயங்களில் கலந்து ஆட வேண்டும் எனத் திட்டமிட்டேன். சில நேரங்களில் சிங்கிள்ஸால் கூட ஸ்கோர் முன்னேறும். அப்படியே என் இன்னிங்ஸை கட்டமைத்தேன். முதலில் பேட்டிங் செய்யும்போது எண்ணங்களை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்,” என்றார்.

விராட் கோலி மைதானத்தில் வந்ததும், ரன்கள் எடுக்க வேண்டிய அழுத்தம் குறைந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார்.

“கோலி வந்து அதிரடியை காட்டியபோது எனது பணி எளிதாகிவிட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் இலக்கு நிர்ணயித்து விளையாட அவர் எனக்கு உதவினார்,” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.