18 பந்தில் 35 ரன் எடுத்தும் ஆட்டநாயகன் இல்லை; அர்ஷ்தீப் சிங்குக்கு ஏன் அந்த விருது?
விருதைப் பெற்ற பின்னர் பேசிய அர்ஷ்தீப் சிங், இந்த விருதை மைதானத்திற்கு வந்திருந்த தனது சகோதரியின் மகளான 10 மாதக் குழந்தைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மாக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த விருது அர்ஷ்தீப் சிங்க்கு வழங்கப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, இந்திய பந்துவீச்சின் கட்டுக்கோப்பை எதிர்கொள்ள முடியாமல் 117 ரன்களுக்கே சுருண்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களிலேயே வெற்றியை உறுதி செய்தது. இந்தச் சேஸில் அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளைச் சந்தித்து, 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வேகமான தொடக்கத்தை வழங்கினார். அவரது அதிரடி பேட்டிங் ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் முழுமையாக திருப்பியது.
இருப்பினும், தென்னாப்பிரிக்காவை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தியதில் அர்ஷ்தீப் சிங்கின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் 3.25 என்ற அளவுக்கு குறைவாக இருந்தது.
ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், மிகக் குறைந்த ரன்களை மட்டுமே வழங்கி தொடக்கத்திலேயே எதிரணி மீது அழுத்தத்தை உருவாக்கியதால் அர்ஷ்தீப் சிங்குக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பின்னர் பேசிய அர்ஷ்தீப் சிங், இந்த விருதை மைதானத்திற்கு வந்திருந்த தனது சகோதரியின் மகளான 10 மாதக் குழந்தைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.
மேலும், இந்தப் போட்டியின் மூலம் அர்ஷ்தீப் சிங் ஒரு முக்கிய சாதனையையும் படைத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரீசா ஹென்ரிக்ஸை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் உருவாக்கினார். இதுவரை அந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்த புவனேஷ்வர் குமார்-ஐ அவர் முந்தினார்.
புவனேஷ்வர் குமார் பவர் பிளே ஓவர்களில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் தற்போது 48 விக்கெட்டுகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். உலகளவில் டிம் சவுதி (58) மற்றும் ஷாஹீன் அப்ரிடி (55) ஆகியோருக்குப் பிறகு, அர்ஷ்தீப் சிங் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங்கை விட, அர்ஷ்தீப் சிங்கின் கட்டுப்பாடான பந்துவீச்சும் சாதனை படைத்த செயல்பாடும் ஆட்டநாயகன் விருதுக்குக் காரணமாக அமைந்தது.
