டிரம்ப் தடாலடி நடவடிக்கை! ஒரு லட்சம் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா! வெளியான அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த ஆண்டு முதல் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு முதல் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டொனால்ட் டிரம்ப் ஆட்சியை பொறுப்பேற்ற பிறகு, குடியேற்றம் மற்றும் விசா விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் நேரடி தாக்கம் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள்மீது கடுமையாக விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனேயே, அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள்மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் சட்டப்பூர்வமாக விசா பெற்று அமெரிக்காவில் வசித்து வந்தவர்களும் இந்தக் கடுமையான நடவடிக்கைகளில் சிக்கத் தொடங்கினர்.
முன்னதாக சிறு விதிமீறல்களுக்கு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், டிரம்ப் ஆட்சி வந்த பிறகு அந்த நடைமுறை முழுவதுமாக மாறியது. விசா என்பது உரிமை அல்ல, அது ஒரு சலுகை மட்டுமே; விதிகளை பின்பற்றவில்லை என்றால் எந்தவித தயக்கமும் இன்றி ரத்து செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவாக எடுத்துள்ளது.
இந்த பின்னணியில், 2025ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்களை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சுமார் 8,000 மாணவர் விசாக்களும், 2,500 சிறப்பு விசாக்களும் அடங்கும். குற்றச்செயல்கள் மற்றும் குடிவரவுக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த விசா ரத்துகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டினரை நாடு கடத்துவோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. தாக்குதல், திருட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விசா ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், குற்றம் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமின்றி, குற்றச்சாட்டு மட்டுமே இருந்தாலும் விசா ரத்து செய்து நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
முந்தைய அதிபரான ஜோ பைடன் பதவியில் இருந்த கடைசி ஆண்டான 2024ல், சுமார் ஒரு லட்சம் விசாக்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இந்த எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா காலம் முடிந்த பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருந்ததாக கூறியே அதிக அளவில் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தாக்குதல் குற்றச்சாட்டுகள் காரணமாக 30% விசாக்களும், திருட்டு மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக 20% விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 மாணவர்களின் விசாக்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிக்காட் கூறுகையில், “அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கும், தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கருதப்படும் வெளிநாட்டு நபர்களை அகற்றும் நடவடிக்கைகள் தொடரும். நாட்டைப் பாதுகாப்பதே டிரம்ப் நிர்வாகத்தின் முதன்மை நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள், சட்டவிரோத குடியேற்றத்துக்கு மட்டுமல்ல, சட்டப்பூர்வமான குடியேற்றத்தின்மீதும் டிரம்ப் நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதை உறுதி செய்கின்றன. வரும் நாட்களிலும் இந்தக் கெடுபிடிகளில் எந்தவித தளர்வும் இருக்காது என்றே கூறப்படுகிறது. இதனால், அமெரிக்காவில் படிக்கும் மற்றும் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள், எதிர்காலத்தில் கூடுதல் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
