இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது நியூசிலாந்து!
நியூசிலானது அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ரச்சீன் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் அரையிறுதிச்சுற்றுகு நியூசிலாந்து அணி முன்னேற தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அதன்படி பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர்.
இதில் பதும் நிஷங்கா 2 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 6 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா ஒரு ரன்னிலும், சரித் அசலங்கா 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் கடந்து, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதமடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
51 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 19 ரன்களிலும், சமிகா கருணரத்னே 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
மஹீஷ் தீக்ஷனா - தில்ஷன் மதுஷங்கா இணை 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலானது அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ரச்சீன் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்களைச் சேர்த்து அசத்தினர். அதன்பின் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்களைச் சேர்த்திருந்த டெவான் கான்வேவும், 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களுடன் ரச்சின் ரவீந்திராவும் விக்கெட்டை இழந்தனர்.
தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க் சாப்மேனும் 7 ரன்கள் எடுத்த நிலையில் டெரில் மிட்செலிற்காக தியாகம் செய்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செலும் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கிளென் பிலீப்ஸ் - டாம் லேதம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 24. ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 10 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |