ஐசிசி தரவரிசை: வருண் சக்கரவர்த்தி டி20 பந்துவீச்சாளர்களில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!
வருண் சக்கரவர்த்தி, ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
துபாய்: ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையின் மூலம், டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறும் மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்னர், பும்ரா மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் இந்த இடத்தைப் பிடித்திருந்தனர்.
வருண் சக்கரவர்த்தி, ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால், அவர் மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார். மேலும், ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்த முதல் தமிழக வீரர் என்ற சாதனையும் வருண் சக்கரவர்த்திக்குச் சொந்தமானது. தமிழக வீரர் அஸ்வின் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து வீரர் ஜேக்கப் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகேல் ஹுசைன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா நான்காவது இடத்திலும் உள்ளனர்.
ஆசிய கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட நுவன் துசாரா ஆறு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தையும், பாகிஸ்தான் வீரர்கள் சுஃப்யான் முக்கீம் 11வது இடத்தையும், அப்ரார் அகமது 16வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இரண்டு போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 23வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசை:
அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.
இங்கிலாந்து வீரர்களான பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
இலங்கை வீரர் பதும் நிஷாங்க ஆறாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 19வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில், டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 39வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசை:
ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் அபிஷேக் ஷர்மா நான்கு இடங்கள் முன்னேறி 14வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் சையிம் அயூப் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
