ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறாரா கோலி? பிசிசிஐ முகாமுக்கு வராமல் தவிர்ப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக இந்த உடற்தகுதி முகாமில் பங்கேற்றார். 

ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறாரா கோலி? பிசிசிஐ முகாமுக்கு வராமல் தவிர்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் உடற்தகுதி முகாமில் பங்கேற்றமை குறித்து எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அவர் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக இந்த உடற்தகுதி முகாமில் பங்கேற்றார். 

அவருடன் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும்  கலந்துகொண்டு, யோ-யோ டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு உடற்தகுதி சோதனைகளை செய்து அதில் தேர்ச்சி அடைந்தனர். 

எனினும், விராட் கோலி குறித்து பிசிசிஐ-க்கு எந்தத் தகவலும் இல்லை என்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அந்த வடிவத்திலிருந்தும், 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 

ஐபிஎல் தொடர் முடிந்ததிலிருந்து, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் தங்கியுள்ள கோலி, சமீபத்தில் லண்டனில் தீவிர உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டாலும், பிசிசிஐ-யின் கட்டாய முகாமுக்கு அவர் வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் சர்வதேசப் போட்டியில் விளையாடினர். ரோஹித் தலைமையில் 12 ஆண்டுக்கு பின்னர் கோப்பையை வெற்றிக்கொண்ட அந்தத் தொடரில், கோலி 5 போட்டிகளில் 218 ரன்கள் குவித்தார்.

2027 உலகக் கோப்பை வரை தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க ரோஹித், கோலி இருவரும் திட்டமிட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குத் தயாராகும் விதமாக, இந்தியா 'ஏ' அணிக்காக ரோஹித்தும், கோலியும் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பிசிசிஐ நடத்தும் இந்த முக்கிய முகாமை கோலி தவிர்ப்பதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.