ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் முதலிடம், கோலி 2-வது இடம் – டாப் 10-ல் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்!
உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசையில், இந்திய அணி சிறப்பான நிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய விராட் கோலி, நீண்ட நாட்களுக்குப் பிறகு தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் மூன்று போட்டிகளில் 302 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம், அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 773 ஆக உயர்ந்துள்ளன.
உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.
டாப் 10 ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மொத்தம் நான்கு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா (1வது), விராட் கோலி (2வது), சுப்மன் கில் (5வது) ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடாததால் ஒரு இடம் சரிந்து, 10வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், அந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுல், தனது சிறப்பான பார்ம் காரணமாக தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி, 12வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
பந்துவீச்சுத் தரவரிசையிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் டாப் 10-ல் உள்ள ஒரே இந்திய பந்துவீச்சாளர். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களில், ரவீந்திர ஜடேஜா 16வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதே நேரத்தில், அர்ஷ்தீப் சிங் 29 இடங்கள் முன்னேறி 66வது இடத்தை அடைந்துள்ளார்.
இந்த புதுப்பிக்கப்பட்ட தரவரிசை, இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ள ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
