IND vs AUS T20: தனி ஆளாகப் போராடிய அபிஷேக் ஷர்மா; 125 ரன்களில் இந்திய அணி சுருண்டது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS T20: தனி ஆளாகப் போராடிய அபிஷேக் ஷர்மா; 125 ரன்களில் இந்திய அணி சுருண்டது

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கிய இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

தொடக்கம் முதலே இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய கில் 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் 4 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு ரன்களிலும், கேப்டன் சூரியகுமார் யாதவ் 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா டக் அவுட் ஆனார், மேலும் அக்சர் பட்டேல் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 49 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான நிலையில், மறுமுனையில் தனி ஆளாகப் போராடிய அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

அபிஷேக்குக்கு ஜோடியாகக் களமிறங்கிய ஹர்ஷித் ரானா 33 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார், இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி சில ஓவர்களில் களம் இறங்கிய சிவம் துபே, ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் இரண்டு பந்துகளை எதிர்கொண்டு நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று குல்திப் யாதவ் மற்றும் பும்ரா அடுத்தடுத்து டக் அவுட்டாகினர்.

இதன் விளைவாக, இந்திய அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களில் சுருண்டது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹேசல்வுட் மூன்று விக்கெட்டுகளையும், சேவியர் மற்றும் நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.