அமெரிக்க கனவுக்கு பெரும் தடை... டிரம்ப் அதிரடி... இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா தடை
அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் கீழ், தெற்காசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவது, அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற காரணத்தை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட 75 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இனி குடியேற்ற விசா வழங்கப்படாது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 21 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகள், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட உள்ளனர். கல்வி, வேலை, குடும்ப இணைப்பு போன்ற காரணங்களுக்காக அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த முடிவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த 75 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு இந்த உத்தரவால் நேரடி பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, உலகளாவிய குடியேற்ற கொள்கைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல நாடுகள் இந்த உத்தரவை கவனமாக பரிசீலித்து வருகின்றன.
டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, குடியேற்ற கொள்கைகளில் கடும் அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினர் பறித்துக்கொள்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டி, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தியுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான முறையில் நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதற்கிடையில், ஐடி துறை உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்பட்டு வந்த H-1B விசா நடைமுறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. விசா கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், இதற்கு எதிராக ஐடி நிறுவனங்களும் மத அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ரஷ்யாவுக்கு எதிராகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள டிரம்ப், அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தும் சட்ட மசோதாவை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ள நிலையில், இந்நேரத்தில் தான் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறுவதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய குடியேற்ற விசா தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
