பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து திலக் வர்மா விளக்கம் – கம்பீருக்கு ஆதரவா, எதிர்ப்பா? ரசிகர்கள் குழப்பம்

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே இந்திய அணி பேட்டிங்கில் நிலைத்தன்மை இழந்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து திலக் வர்மா விளக்கம் – கம்பீருக்கு ஆதரவா, எதிர்ப்பா? ரசிகர்கள் குழப்பம்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே இந்திய அணி பேட்டிங்கில் நிலைத்தன்மை இழந்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த இரண்டாவது டி20 போட்டியில், பெரிய இலக்கை துரத்திய போது அக்சர் பட்டேல் மூன்றாவது வீரராக களமிறங்கினார். பவர் பிளேவில் அவர் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தது, தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதே போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா 62 ரன்கள் எடுத்து கடுமையாக போராடினார். இதனால், திலக் வர்மாவை மூன்றாவது இடத்தில் களமிறக்கியிருந்தால் இந்திய அணியை அவர் காப்பாற்றியிருப்பார் என ரசிகர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தர்மசாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலக் வர்மா, பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். தொடக்க வீரர்களை தவிர மற்றவர்கள் 3, 4, 5 அல்லது 6 என எந்த இடத்தில் களமிறங்கினாலும் விளையாட தயாராக இருப்பதாக அவர் கூறினார். எந்த வரிசையில் இறங்கினாலும் அணிக்காக ரன்கள் சேர்ப்பதே தன்னுடைய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

மேலும், அக்சர் பட்டேல் நடுவரிசையில் முன்பும், டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக திலக் வர்மா விளக்கம் அளித்தார். அணிக்கு அன்றைய தினம் எது சிறந்தது என கேப்டனும் பயிற்சியாளரும் முடிவு எடுப்பார்கள்; அதற்கு வீரர்களாகிய நாங்கள் முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மனதளவில் பலமாக இருந்தால் வெற்றி தானாக வரும் என்றும், எந்த இடத்தில் களமிறக்கினாலும் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதையே தான் யோசிப்பதாகவும் திலக் வர்மா கூறினார். அவரது இந்த கருத்துகள், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்ற முடிவுகளை முன்னெடுத்து வரும் கௌதம் கம்பீருக்கு ஆதரவானதா, இல்லை மறைமுக எதிர்ப்பா என்ற குழப்பத்தை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.