ஆசிய கோப்பை 2025: "சஞ்சு சாம்சன் குறித்து கவலைப்பட வேண்டாம், நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்" - சூர்யகுமார் யாதவ் உறுதி

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் புதன்கிழமை யுஏஇ அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

ஆசிய கோப்பை 2025: "சஞ்சு சாம்சன் குறித்து கவலைப்பட வேண்டாம், நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்" - சூர்யகுமார் யாதவ் உறுதி

துபாய்: 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் புதன்கிழமை யுஏஇ அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இந்தத் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருப்பதால், தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது, இது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ்விடம், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யகுமார், "இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும் போது நான் உங்களுக்கு யாரை தேர்வு செய்திருக்கிறோம் என்று தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கின்றேன். ஆனால் நீங்கள் சஞ்சு சாம்சன் குறித்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றோம்" என்று உறுதி அளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், "நாங்கள் சரியான முடிவை எடுப்போம். இந்தத் தொடரில் நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. யுஏஇ அணியும் சமீப காலப் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். பெரிய அணிகளுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறார்கள். நிச்சயம் இந்தத் தொடர் அவர்களின் வெற்றிக்கு முதல் படியாக இருக்கும். இந்தத் தொடரில் களமிறங்கும் மற்ற அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.

யுஏஇ அணிக்கு எதிராக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட சூர்யகுமார், இந்திய அணி கடைசியாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் ஒரே அணியாக டி20 போட்டிகளில் விளையாடியதாகவும், அதன் பிறகு ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட முறையில் அனைவரும் விளையாடி இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஜூன் மாதத்திற்குப் பிறகு பெரிய அளவில் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாதது நிச்சயம் ஒரு சவால் என்றும், இந்த சவாலை ஏற்று சிறப்பாக செயல்படுவோம் என்றும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2025 ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.