வரலாற்று சிறப்புமிக்க பயணத்துக்கு தயாராகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்
ஒரு உலகக் கோப்பை மற்றும் பல ஐபிஎல் கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரின் ஈடுபாடு, பிக்பேஷ் லீக்கிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் முன்னணி டி20 லீக்கான பிக்பேஷ் லீக் (BBL) போட்டிகளில் பங்கேற்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் (CA) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அடுத்த 2025-26 சீசனிலேயே நடக்கலாம் என்று தெரிகிறது, இதன் மூலம் BBL இல் விளையாடும் முதல் உயர்மட்ட இந்திய கிரிக்கெட் வீரராக அஸ்வின் திகழ வாய்ப்புள்ளது.
அஸ்வின் சமீபத்தில் தனது ஐபிஎல் ஓய்வை அறிவித்த பிறகு, "பல்வேறு லீக்குகளில் விளையாடும் ஆய்வாளராக" மாறப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாட் கிரீன்பெர்க், அஸ்வினுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார்.
"அஸ்வின் போன்ற ஒருவரை பிக்பேஷ் லீக்கிற்கு கொண்டு வருவது பல நிலைகளில் சிறப்பாக இருக்கும். அவர் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர், பிக்பேஷ் மற்றும் எங்கள் கிரிக்கெட் கோடைக்கு நிறைய பங்களிப்பை வழங்குவார்" என்று கிரீன்பெர்க் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கையில் உள்ளது. அஸ்வின் எத்தனை போட்டிகளில் விளையாடுவார், எந்த அணிக்காக விளையாடுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றாலும், மெல்போர்ன் அணியில் அவர் இணைய வாய்ப்புள்ளதாக சில வட்டாரங்கள் நம்புகின்றன.
ஒரு உலகக் கோப்பை மற்றும் பல ஐபிஎல் கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரின் ஈடுபாடு, பிக்பேஷ் லீக்கிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
அஸ்வின் போன்ற ஒரு இந்திய வீரரைக் கொண்டு வருவது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையலாம், முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இந்த ஆண்டு தொடக்கத்தில் SA20 இல் பர்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய முதல் இந்தியர் என்றாலும், அஸ்வினின் இந்த BBL பயணம் அவரது சர்வதேச ஆட்டத்தின் மதிப்பின் அடிப்படையில் ஒரு முன்னோடிப் பயணமாக இருக்கும்.
இது அஸ்வினுக்கு மட்டுமல்லாமல், விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் அல்லது எதிர்காலத்தில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மற்ற இந்திய வீரர்களுக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கலாம்.
