"எல்லா நேரமும் நீங்க சொல்றது சரியாகாது".. கம்பீரை விமர்சித்த அப்ரிடி; ரோஹித், கோலிக்கு ஆதரவு
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான தனது விமர்சனங்களை மீண்டும் முன்வைத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி. டெலிகாம் ஏசியா ஸ்போர்ட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கம்பீரின் பயிற்சியாளர் பாணியைக் கடுமையாகச் சுட்டிக்காட்டிய அப்ரிடி, “எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது சரியாக இருக்காது” என்று தெளிவாகத் தெரிவித்தார்.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார். குறிப்பாக, இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட்டில் ஒயிட்வாஷ் சந்தித்தது, கம்பீரின் டெஸ்ட் கிரிக்கெட் வியூகங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை அப்ரிடி உறுதியாக ஆதரித்தார். “விராட் மற்றும் ரோஹித் இருவரும் இந்திய பேட்டிங் வரிசையின் ஆணிவேர்கள். சமீபத்திய ஒருநாள் தொடரில் அவர்கள் ஆடிய விதத்தைப் பார்த்தால், 2027 உலகக்கோப்பை வரை அவர்களால் நிச்சயம் விளையாட முடியும்” என்று கூறினார்.
இந்திய பேட்டிங்கின் “முதுகெலும்பு” என்று ரோஹித்–கோலி கூட்டணியை வர்ணித்த அப்ரிடி, பிசிசிஐக்கும் ஓர் ஆலோசனை வழங்கினார். “இந்த இரு நட்சத்திரங்களையும் பாதுகாக்க வேண்டும். பலவீனமான அணிகளுக்கு எதிரான தொடர்களில் இவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இளம் வீரர்களைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமான போட்டிகளுக்கு மட்டுமே இவர்களை அனுப்ப வேண்டும்” என்றார்.
ரோஹித் சர்மா சமீபத்தில் அப்ரிடியின் ஒருநாள் போட்டிகளில் அடித்த 351 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்ததைப் பற்றியும் அப்ரிடி பேசினார். “சாதனைகள் முறியடிக்கவே உருவாக்கப்படுகின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஒரு வீரர் என் சாதனையை முறியடித்ததில் மகிழ்ச்சியே” என்று தனது மனதார்ந்த பாராட்டைத் தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் ஆரம்ப காலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ரோஹித் வலைப்பயிற்சியில் ஆடுவதைப் பார்த்தபோது, “இவர் ஒருநாள் உலகத்தரம் வாய்ந்த வீரராக வருவார்” என்று நம்பியதாகவும், அந்த நம்பிக்கை இப்போது உண்மையாகியுள்ளதாகவும் அப்ரிடி தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
