ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சரிந்த கோலி, ரோகித்.... கிடுகிடுவென முன்னேறிய ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்து உள்ளனர்.

Sep 26, 2024 - 11:13
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சரிந்த கோலி, ரோகித்.... கிடுகிடுவென முன்னேறிய ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்து உள்ளனர்.

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில, சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய ரிஷப் பண்ட்,  சதம் அடித்த நிலையில் மீண்டும் டாப் 10 இடத்திற்கு நுழைந்து தற்போது ஆறாவது இடத்தை பிடித்து உள்ளார்.

அத்துடன், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதுடன், வங்கதேசத்துக்கு எதிராக சொதப்பிய ரோகித் சர்மா ஐந்து இடங்கள் பின் தங்கி தற்போது 716 புள்ளிகளுடன் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பிய விராட் கோலி ஐந்து இடங்கள் சரிந்து டாப் 10 இடத்தை விட்டு வெளியேறி பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில், ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது 14 வது இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் திறமை வாய்ந்த இளம்வீரர் கமிந்து மெண்டிஸ் மூன்று இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். 

பேட்டிங் வரிசையில் ஜோ ரூட் முதலிடத்திலும், வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், டாரல் மிச்செல் மூன்றாவது இடத்திலும் ஸ்மித் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 

அத்துடன், இந்திய அணியின் ஸ்டார் வீரரான பும்ரா இரண்டாவது இடத்திலும், ஆஸி வீரர் ஹேசல்வுட் மூன்றாவது இடத்திலும் உள்ளதுடன், ஜடேஜா ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதுபோன்று, இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் ஷகிபுல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!