ரோகித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து மற்றொரு வீரருக்கும் ஆப்பு வைத்த பிசிசிஐ.. டெஸ்ட்டில் வாய்ப்பில்லை?
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் ஓய்வை அறிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் ஓய்வை அறிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து இரண்டு அனுபவ வீரர்கள் விலகிய நிலையில், மூன்றாவதாக அனுபவ வீரரான முகமது ஷமியை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் தவிர்க்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த தலைமுறை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணியில், வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவுடன் முகமது ஷமி இணைந்து பந்துவீசுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அதற்காக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தக் கூட்டணி விளையாடும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது முகமது ஷமிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் கிடைத்துள்ளது.
முகமது ஷமிக்கு காலில் உள்ள பிரச்சனைக்காக 2023 உலகக் கோப்பை முதல் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் அவர் மீண்டும் பந்துவீசத் தயாரானார்.
அத்துடன், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பாகப் பந்து வீசினார். பிறகு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற அவரால், ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அவரது பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே உள்ளது என்றாலும், ஐபிஎல்-இல் சிறப்பாகச் செயல்பட்டதை வைத்து எந்த ஒரு வீரரையும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்வதில்லை.
எனினும், முகமது ஷமியால் முழு செயல் திறனை வெளிப்படுத்த முடியவில்லை என்பதே தற்போது பிரச்சனையாக உள்ளது. அவருக்குக் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்பதால், அவரால் முன்பு போல பந்தை வீச முடியவில்லை.
மேலும், இரண்டு ஓவர்கள் வீசினாலே முகமது ஷமி ஓய்வறைக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் டி20 போட்டியில் வேண்டுமானால் அவர் விளையாடலாம்.
ஆனால், டெஸ்ட் போட்டி என்று வரும்போது தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீச வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எனவே, முகமது ஷமியின் உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரைத் தேர்வு செய்யப் போவதில்லை எனத் தேர்வு குழு முடிவெடுத்திருப்பதாக சொல்ப்படுகின்றது.
இது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும். அத்துடன், முகமது சிராஜ் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் சரியாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றால், அனைத்து அழுத்தமும் பும்ரா மீது விழும்.