கோலியின் திட்டத்தை தூக்கி வீசிய பிசிசிஐ.. சர்ச்சைக்குரிய முறை நீக்கப்பட்டது!
இந்திய அணியில் அவரால் கட்டாயமாக்கப்பட்ட யோ யோ தேர்வு எனப்படும் உடற் தகுதி பரிசோதனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து டி20 உலகக் கோப்பை தொடருடன் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார். இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணியில் அவரால் கட்டாயமாக்கப்பட்ட யோ யோ தேர்வு எனப்படும் உடற் தகுதி பரிசோதனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
யோ யோ தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் அளிக்கப்படும் என்ற நிலை விராட் கோலி கேப்டனாக இருந்தபோது காணப்பட்டது.
விராட் கோலி டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், அவர் கேப்டனாக இருந்த போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டும் ஓய்வு பெற்று விட்டதால், அந்த தேர்வை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
யோ யோ தேர்வால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்ததும், உடற்தகுதி இருந்தும் வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்கி வந்ததாலும் இந்த தேர்வை நீக்கி உள்ளது பிசிசிஐ.
யுவராஜ் சிங்குக்கு யோ யோ தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மீண்டும் 2019 உலகக்கோப்பைக்கு முன் யுவராஜ் சிங் யோ யோ தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும், அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
குறிப்பாக ரோஹித் சர்மா அந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற வதந்தியும் அப்போது இருந்தது. அதன் காரணமாக அவரை அணியவிட்டு நீக்க உள்ளதாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முடிவில் சர்ச்சைகள் எழுந்தன.
இப்படி அந்த தேர்வால் பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில் அதை பிசிசிஐ நீக்கி உள்ளது.
அத்துடன், அதற்கு பதிலாக மூன்று வெவ்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி இனி ஒரு வீரர் எந்த அளவு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை பரிசோதனை செய்ய தேசிய உடற்பகுதி தேர்வு அளவுகோல் ஒன்று உருவாக்கப்படும்.
அதில் பல்வேறு விதமான சோதனைகள் நடத்தப்படும். ஆனால், இதை வைத்து ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து நீக்க முடியாது. இந்தத் தேர்வு 12 வாரங்கள் முதல் 16 வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
இரண்டாவதாக ஒரு வீரரின் செயல்பாட்டுத் திறனை பரிசோதிக்க ஆறு வாரங்களுக்கு ஒரு முறையும், மூன்றாவதாக ஒரு வீரர் காயம் அடையாமல் தடுக்க இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் பரிசோதனைகள் நடத்தப்படும்.
ஆனால், இதில் தகுதி பெற்றால் தான் இந்திய அணியில் இடம் என எந்த கட்டாயமும் இல்லை. இதன் மூலம் ஒரு வீரரின் கிரிக்கெட் திறமையை வைத்தே இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |