இந்திய பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய கம்பீர்.. கடைசி நேரம்வரை வாய்ப்பின்றி சோர்ந்த இளம் வீரர்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய டி20 அணியில் பிரகாசித்துவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அர்ஷ்தீப் சிங்கை ஒரு மாற்று பந்துவீச்சாளராகவே பார்க்கிறார். தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டதால் அர்ஷ்தீப் சிங் பொறுமையிழந்து காணப்பட்டதாக அவரது பஞ்சாப் அணி பந்துவீச்சுப் பயிற்சியாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளாளர்.
டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் 99 விக்கெட்டுகளையும், 9 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப், இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்திலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த ககன்தீப் சிங், "சில மாதங்களுக்கு முன்பு அவர் இங்கிலாந்தில் இருந்தபோது, அவரிடம் பேசினேன்.
தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் மிகவும் பொறுமையிழந்து காணப்பட்டார். நான் அவரிடம், 'உனக்கான நேரம் வரும் வரை நீ காத்திருக்க வேண்டும்' என்று மட்டும் கூறினேன்.
உண்மையில், அவர்கள் அர்ஷ்தீப்பை இங்கிலாந்தில் விளையாட வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு ஸ்விங் பந்துவீச்சாளர், நல்ல உயரமும் கொண்டவர், எல்லாம் அவருக்குச் சாதகமாக இருந்தது," என்று கூறினார்.
மேலும் அவர், "ஒருவேளை பயிற்சியாளர் (கம்பீர்) மற்றும் கேப்டன் (கில்) ஆகியோருக்கு அவர் மீது முழு நம்பிக்கை இல்லாததாலோ இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்," என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ககன்தீப், "அவர் தனது ஸ்விங் மற்றும் துல்லியத்தில் இன்னும் கவனம் செலுத்தினால், ஒரு சிறந்த பந்துவீச்சாளராக வர முடியும்.” என்றார்.
முன்னதாக, அர்ஷ்தீப்பின் சிறுவயது பயிற்சியாளரான ஜஸ்வந்த் ராயும், அர்ஷ்தீப் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயாராகிவிட்டதாகக் கூறியிருந்தார்.
இனி வரும் டெஸ்ட் தொடர்களிலாவது அர்ஷ்தீப் சிங் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுவாரா என்பதே தற்போதைய கேள்வியாகும்.
