பழங்குடி மக்களின் காணிகளை அபகரிக்க திட்டம்... அச்சுறுத்தல் குறித்து கடிதம்

தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், காட்டில் தேன் சேகரித்தல், நன்னீர் மீன்பிடி மற்றும் நெல், நிலக்கடலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்ச்செய்கை ஊடாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

பழங்குடி மக்களின் காணிகளை அபகரிக்க திட்டம்... அச்சுறுத்தல் குறித்து கடிதம்

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் சூறையாடியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர், இந்தத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டு வந்துள்ளது.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் சுமார் 70 ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 150 தமிழ் பேசும் பழங்குடி குடும்பங்களை தங்கள் காணியை விட்டு வெளியேறுமாறு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

தேக்கஞ்சேனையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குழு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் அச்சுறுத்தல் குறித்து  ஜூலை 7 வாகரை பிரதேச செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடிதத்தை ஏற்றுக்கொண்ட வாகரை பிரதேச செயலாளர், இந்த விடயத்தை ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச கிராம அலுவலருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், காட்டில் தேன் சேகரித்தல், நன்னீர் மீன்பிடி மற்றும் நெல், நிலக்கடலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்ச்செய்கை ஊடாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த வருடத்தில் கடந்த ஆறு மாதங்களாக வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் தங்களை காணியைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேன் எடுக்க காட்டுக்குள் நுழைய விசேட அதிரடிப்படையினர் அனுமதிக்காமையால், தாங்கள் ஏற்கனவே வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

இதேபோன்ற பழங்குடி மக்கள் வசிக்கும் கல்லரிப்புச் சேனை நான்காம் கட்டை, மூன்றாம் கட்டை  கிராமங்களில் பெப்ரவரி 2025 இல், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், பழங்குடி மக்கள் வாழ்ந்த 13 குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதோடு, அவர்கள் உணவுக்காக சேகரித்த பாசிப்பயறு, நிலக்கடலை மற்றும் நெல் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வாகரை பொலிஸில் முறைப்பாடு செய்து நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

2012 முதல் வனப் பாதுகாப்பு மற்றும் வனச் சட்டங்களின் கீழ் கூகள் வரைபடங்களைப் பயன்படுத்தி மக்களால் பயன்படுத்தப்பட்ட ஏராளமான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில், கூறியிருந்தார்.

கையகப்படுத்தப்பட்ட காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் ஆய்வு செய்து, காடுகளுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மக்களுக்கு வழங்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 1985ஆம் ஆண்டில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தன்வசம் உள்ள வரைபடத்தின்படி செயல்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

முப்படைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை, தொல்லியல் திணைக்களம்  மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.