இங்கிலாந்து மண்ணில் சரித்திர வெற்றி.... வரலாறு படைத்தது இந்திய அணி!
இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றி கூட பெறாத இந்திய அணி அங்கு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில், முதல் முறையாக வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இந்த வெற்றிக்கு, சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிக ரன்கள் குவித்ததும், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுமே முக்கிய காரணங்களாக அமைந்தன.
முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மைதானத்தில் இதுவரை ஆடிய எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெறாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் சேர்க்க ஜெய்ஸ்வால் 87 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களும் எடுத்திருந்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஷோயப் பஷீர் மூன்று விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது.
ஹாரி ப்ரூக் 158 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 184 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் ஆறு விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்திருந்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக ரன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்தது.
சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 65 ரன்களும், கே.எல். ராகுல் 55 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 69 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்ததுடன், இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவது நாளின் முடிவிலேயே அந்த அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 536 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.
ஏழு விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்ததால், இங்கிலாந்து அணி டிரா செய்ய முயற்சித்தது. ஆனால், இந்திய அணியில் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியால் டிரா செய்ய முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றதுடன், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை ஆடிய மொத்தம் ஒன்பது போட்டிகளில் தனது முதல் வெற்றியையும் பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது.
முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளும் என மொத்தம் 10 விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் வீழ்த்தி இருந்தார்.
முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் சுப்மன் கில் எடுத்து இருந்தார். இவர்கள் இருவரது அபாரமான செயல்பாட்டால் இந்திய அணி இந்த வரலாற்று சாதனை மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.