விராட் கோலியின் 9 ஆண்டு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் அபிஷேக் சர்மா
இந்தப் போட்டி, இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாக்கு ஒரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
தர்மசலாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தப் போட்டி, இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாக்கு ஒரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
நடப்பாண்டில் இந்திய அணிக்கு இன்னும் மூன்று டி20 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு விராட் கோலி படைத்த 9 ஆண்டு பழைய சாதனையை அபிஷேக் முறியடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். அந்த சாதனையை உடைக்க அவருக்கு தற்போது வெறும் 87 ரன்களே தேவை.
இந்த ஆண்டில் அபிஷேக் சர்மா 39 டி20 போட்டிகளில் விளையாடி, 41.43 என்ற சிறப்பான சராசரியுடன் 1,533 ரன்களை குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும், ஒன்பது அரை சதங்களும் அடங்கும். இதற்கு முன், 2016ஆம் ஆண்டு விராட் கோலி 31 டி20 போட்டிகளில் 89.66 சராசரியுடன் 1,614 ரன்கள் எடுத்திருந்தார். நான்கு சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் கொண்ட அந்த சாதனை, இன்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய – தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கட்டாக்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்திய அணி 175/6 ரன்கள் குவித்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சண்டிகரில் நடந்த இரண்டாவது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக், எட்டு பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அந்த இன்னிங்ஸில் அவர் இரண்டு சிக்ஸர்களை விளாசி, டி20 கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களை கடந்த இந்திய பவர் ஹிட்டர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதும், மூன்றாம் வரிசையில் அக்சர் பட்டேல் களமிறங்குவதும், பவர்பிளேவில் ரன்கள் குவிக்க வேண்டிய அழுத்தத்தை அபிஷேக் மீது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டமிழப்பதாகவும், இது தேவையற்ற சுமையாக மாறுவதாகவும் சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டிக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்.
சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கினால், எந்த அழுத்தமும் இன்றி அபிஷேக் விளையாட முடியும் என்பதால், ரசிகர்களும் அந்த மாற்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், அபிஷேக் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும், பந்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் விளையாடினாலே ரன்கள் தானாக வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தர்மசலா மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் அபிஷேக் சர்மா விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
