ஹாங்காங் குடியிருப்பில் பெரும் தீ விபத்து: 44 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் மாயம்
ஹாங்காங் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹாங்காங் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குகிறார்.
தீயில் சிக்கி காயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ தெரிவித்தார்.
இதுவரை 279 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. திடீர் தீ விபத்தால் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 900 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்த வளாகத்தில் உள்ள எட்டு கட்டிடங்களில் ஏழு கட்டிடங்கள் சமீபகாலத்தில் பழுது பார்க்கப்பட்டு வந்ததாகவும், கட்டிடங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மூங்கில் கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு வலைகள் தீ பரவலை வேகப்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகார் 2.51 மணிக்கு பதிவு செய்யப்பட்டதுடன், தீ விரைவாக பரவி, ஆரம்பத்தில் ‘நம்பர் 1’ நிலை என வகைப்படுத்தப்பட்ட தீ எச்சரிக்கை, தொடர்ந்து ‘நம்பர் 5’ எனும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு உயர்த்தப்பட்டது. பல கட்டிடங்கள் முழுவதும் தீப்பற்றியதால், அதை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினருக்கு பெரிய சவாலாக இருந்தது.
இந்த சம்பவம் சமீப ஆண்டுகளில் ஹாங்காங் சந்தித்த மிகப் பெரிய பேரிடியாகக் கருதப்படுகிறது.
