இங்கிலாந்துக்கு அவுட் இல்லை.. ஆனால் இந்தியாவுக்கு அவுட்.. ஏன் இந்த பாரபட்சம்... விளாசிய கவாஸ்கர்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் விக்கெட் குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் விக்கெட் குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
ஐந்தாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது கே எல் ராகுலுக்கு தவறான டிஆர்எஸ் முடிவு அளிக்கப்பட்டு அவர் ஆட்டமிழந்ததாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்தியா தோல்வியை நோக்கி தள்ளப்பட்டது.
இந்த மூன்று விக்கெட்டுகளின் இழப்பு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அபாரமான பந்துவீச்சில் பண்ட்டும், சுந்தரும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான மூன்று காரணங்கள்: அதிலும் முக்கிய காரணம் இதுதான்!
இதில் கே.எல். ராகுலின் எல்.பி.டபிள்யூ ஆட்டமிழப்பு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ராகுலுக்கு கள நடுவர் நாட்-அவுட் கொடுத்தார்.
ஆனால், இங்கிலாந்து அணி டி.ஆர்.எஸ் முறையீடு செய்ததில், பந்து மிடில் ஸ்டம்பைத் தாக்குவது தெரிந்து, அவுட் கொடுக்கப்பட்டது. இந்த முடிவால் அதிருப்தியடைந்த கவாஸ்கர், வர்ணனையின்போது டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பினார்.
"இந்தப் பந்து அதிகம் எழும்பவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது, ரிவ்யூக்களில் பந்துகள் பெரும்பாலும் ஸ்டம்பிற்கு மேலே செல்வதாகக் காட்டப்பட்டது. ஆனால், இப்போது மட்டும் ஸ்டம்ப்பை தாக்குகிறது. நான் தொழில்நுட்பத்தையே கேள்வி கேட்கிறேன்" என்று சுனில் கவாஸ்கர் விளாசினார்.
முன்னதாக, போட்டியின் நான்காவது நாளில், இங்கிலாந்தின் ஜோ ரூட், சிராஜ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையீட்டில் இருந்து தப்பியபோதும் கவாஸ்கர் இதேபோன்ற விமர்சனத்தை முன்வைத்தார்.
பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெளிவாகத் தெரிந்தும், 'அம்பயர்ஸ் கால்' என தீர்ப்பளிக்கப்பட்டு அவர் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டதை கவாஸ்கர் கடுமையாக சாடினார்.
"பந்து லெக் ஸ்டம்பை முத்தமிட்டு விட்டு அப்படியே செல்லும் என்கிறீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. பந்து ஸ்டம்பை தகர்த்தெறிந்திருக்கும்" என்று லெக் ஸ்டம்ப்பில் பட்டால் ரிவ்யூவில் அவுட் இல்லை என தீர்ப்பளிக்கும் முறைக்கு எதிராக பேசி இருந்தார் கவாஸ்கர்.
அத்துடன், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட்டும் கவாஸ்கரின் கருத்தை ஆமோதித்தது குறிப்பிடத்தக்கது.
கே எல் ராகுல் ஆட்டமிழந்த பின்னர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே கடைசி வரை நின்று போராடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.