3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தபோது, சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் கூட ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இருப்பினும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். கேப்டன்சி மாற்றம் தொடர்பாக ரோஹித் சர்மாவிடம் ஆலோசிக்கப்பட்டது என்றும், இதனால் இந்த மாற்றம் சுமூகமாக முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கொடுத்துள்ள ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது கடினமான ஒன்று என்று அகர்கர் ஒப்புக்கொண்டார். அவர் சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவில்லை என்றாலும், இந்திய அணிக்காக அவர் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு கடினமானது தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், "சில நேரங்களில் நாம் எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். இந்திய அணிக்கு எது சரியோ, அதனை செய்ய வேண்டும்" என்று அகர்கர் வலியுறுத்தினார். இன்னும் ஆறு மாதத்திற்குப் பிறகு இந்த முடிவு சரியானதாக கூட இருக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், 2027 உலகக்கோப்பை மீது ஒரு பார்வையை வைத்து, அதற்காகத் திட்டமிட புதிய கேப்டனுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணி விளையாடும் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும், மூன்று கேப்டன்களை நியமிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று அகர்கர் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால், அது கேப்டன்களுக்கு மட்டுமல்லாமல், பயிற்சியாளருக்கும் சிக்கலாக அமையும் என்றும், ஒவ்வொரு கேப்டனுடனும் பயிற்சியாளர் அவர்களின் திட்டத்திற்குப் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே சுப்மன் கில்லுக்கு இந்திய அணியிலும், பிசிசிஐ நிர்வாகத்திலும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.