அவமானத்தால் அஸ்வின் ஓய்வு?  தந்தை வெளியிட்ட கருத்தால் சர்ச்சை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டார். 

Dec 20, 2024 - 13:33
Dec 20, 2024 - 13:36
அவமானத்தால் அஸ்வின் ஓய்வு?  தந்தை வெளியிட்ட கருத்தால் சர்ச்சை

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தமைக்கு அவமானம் கூட காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டார். 

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பே பெறாத அஸ்வின் இரண்டாவது போட்டியில் விளையாடினார். மீண்டும் மூன்றாவது போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

இந்த நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று சொந்த ஊரான சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது பெற்றோர் கண்ணீர் மல்க அவருக்கு உணர்ச்சி பூர்வமான வரவேற்பை கொடுத்தனர். 

அஸ்வின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரது தந்தை கூறுகையில், அஸ்வின் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் ஓய்வை அறிவித்து விட்டார். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். 

அவரது அறிவிப்பு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும் இன்னொரு வகையில் அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று கருதுகிறேன். அஸ்வினின் முடிவில் நான் தலையிட முடியாது. ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று அஸ்வினுக்கு மட்டும்தான் தெரியும். அவமானம் கூட அவர் ஓய்வை அறிவித்ததற்கு காரணமாக இருக்கலாம்.

15 ஆண்டுகளாக அஸ்வின் கிரிக்கெட் விளையாடி வருகிறார். திடீரென அவர் ஓய்வை அறிவித்தது எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். தற்போது அஸ்வினின் தந்தை தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, பிரபல விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி ராமன் அஸ்வின் தந்தையின் பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனை ரீ ட்வீட் செய்துள்ள அஷ்வின், ‘எனது தந்தைக்கு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அனுபவம் கிடையாது… என்ன அப்பா இதெல்லாம்!! எனது தந்தையை மன்னித்து அவர் தனிமையில் இருக்க அனுமதியுங்கள்’ என்று கூறியுள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!